ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான விழிப்புணர்வையும், அதன் பயன்பாட்டுத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறைத் தொடரின் நான்காவது நிகழ்வு, கடந்த செவ்வாய்க்கிழமை (3) புத்தளத்தில் நடைபெற்றது.
தெற்காசியப் பெண்கள் ஊடக அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பயிற்சிப் பட்டறை, புத்தளம் நோர்த் வீதியிலுள்ள கிரேண்ட் மல்ஹாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
‘Digital Equity SL – Responsible AI Empowering Women, Media & Civil Society’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சித் தொடருக்கு உள்ளூர் முயற்சிகளுக்கான கனேடிய நிதியத்தின் (CFLI) அனுசரணை வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிப் பட்டறையில் வளவாளராகக் கலந்துகொண்ட கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், அதன் பல்வேறு கருவிகள் மற்றும் ஊடகத்துறையில் அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் செயன்முறைப் பயிற்சிகளை வழங்கினார். பங்கேற்பாளர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை நேரடியாகப் பயன்படுத்திப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் இதன்போது வழங்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குவதிலும் கொள்கை உருவாக்கத்திலும் பங்களிப்புச் செய்வோர் மத்தியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புரிதலை மேம்படுத்துவதுடன், அதன் பொறுப்பான மற்றும் ஆக்கபூர்வமான பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இப்பயிற்சித் தொடரின் பிரதான நோக்கமாகும்.

இப் பயிற்சிப்பட்டறைத் தொடரின் முதல் மூன்று அமர்வுகள் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.